ராக்கெட் ஏவுதளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

ராக்கெட் ஏவுதளம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் மோடி

வருகிற 28ஆம் தேதி தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் மிகப்பிர மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கேரளா புறப்பட்டு செல்கிறார். 28-ந் தேதி (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு ராக்கெட் ஏவு தளத்தை அமைப்பதற்காக மத்திய அரசு முடிவு செய்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில் ராக்கெட் ஏவ சிறந்த இடம் மற்றும் எரி பொருள் என பல்வேறு வழிகளில் மிகச்சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதேபோல் ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரெயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார். மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் சோதனை நடத்த உள்ளனர். கடலோர காவல்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடலில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தண்ணீரில் செல்லும் சிறப்பு விமானம் மூலம் ராமேஸ்வரம் பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை தினமும் 3 முறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.இதேபோல் துறைமுக நுழைவுவாயில் பகுதிகளில் கடலோர காவல்படையினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் துறைமுகத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு படகு மூலம் கடலோர காவல் படையினர் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். விழாவையொட்டி தூத்துக்குடி ஹெலிபேட் தளத்தில் இருந்து விழா நடைபெறும் தூத்துக்குடி துறைமுக நிர்வாக அலுவலகம் வரை பிரதமர் மோடி குண்டு துளைக்காத 'புல்லட் புரூப்' காரில் செல்கிறார். இந்த கார் வருகிற 26-ந் தேதி தூத்துக்குடி வர உள்ளது. மேலும் தமிழக போலீசார் சார்பிலும் ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story