வெள்ளத்தால் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.15 கோடி நிவாரண தொகை - முதல்வர் அறிவிப்பு

வெள்ளத்தால் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.15 கோடி நிவாரண தொகை - முதல்வர் அறிவிப்பு

படகுகளுக்கு ரூ.15 கோடி நிவாரண தொகை வழங்கப்படும்

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தில் சேதம் அடைந்த 4,928 மீன்பிடி படகுகளும், எந்திரங்களும் நிவாரண தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தில் சேதம் அடைந்த 4,928 மீன்பிடி படகுகளும், எந்திரங்களும் நிவாரண தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 4,928 மீன்பிடி படகுகளும், எந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரண தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பசு, எருமைக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.

கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்க வசதியாக ரூ.1½ லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட உப்பள தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பள தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரண தொகை தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது சேதமடைந்து இருக்கலாம்.

அவர்களுக்கு புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் அவர்களுக்கு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் மூலமாக புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்களை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக வழங்கப்படும். இது பாதிப்புக்குள்ளான அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.

வருவாய்த்துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள், ஆவணங்கள், குடும்ப அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இந்த மழை வெள்ளத்தால் இழந்தவர்கள் புதிய ஆவணத்தை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரால் வரும் திங்கட்கிழமை தோறும் தொடங்கப்படும். வாகனங்களுக்கான காப்பீடு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் காப்பீட்டு நிறுவனங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும், முகவர்களும் சிறப்பு முகாம்கள் நடத்தி தங்களது சேவைகளை துரிதப்படுத்திட தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வாகன பழுது பார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 3,046 மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்பு பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு அவற்றில் 917 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,129 வாகனங்களுக்கான பழுதுபார்ப்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story