ரூ.850 கோடி முதலீடு.. சிகாகோவில் மு.க.ஸ்டாலின் அதிரடி
மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்ட தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் , தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் முக்கிய அதிகாரிகள் கொண்ட பெரிய டீம் தற்போது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் உள்ளது.
இந்நிலையில் சிகாகோவில் அஸ்யூரண்ட், ஈட்டன், ட்ரில்லியன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் சுமார் 3050 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அஸ்யூரண்ட் நிறுவனம் சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைப்பதாகவும், ஈட்டன் நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்தில் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது,
இதே போல ட்ரில்லியன்ட் நிறுவனம் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீட்டையும், லிங்கன் எலக்ட்ரிக் சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்தில் மேற்கொள்கிறது. இதேபோல விஸ்டியன் நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாய் முதலீட்டையும், விஜய் பிரஷிசன் நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டையும், நைக்கி நிறுவனம் உற்பத்தி விரிவாக்கத்திற்காக ஆலோசனை மேற்கொண்டதோடு, ஆப்டம் நிறுவனம் புதிய தொழில் முதலீட்டுக்காக அழைப்பு விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பே பால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனங்கள் சூலூர், மதுரை, செங்கல்பட்டில் சுமார் 900 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்கின்றன.