சேலம்: தாமதமாக துவங்கிய சீசன் - மாம்பழங்களின் வரத்து குறைவு

சேலம்: தாமதமாக துவங்கிய சீசன் - மாம்பழங்களின் வரத்து குறைவு

விற்பனைக்கு வந்த மாம்பழங்கள்

சேலத்தில் போதிய மழை இல்லாததால் மாம்பழ சீசன் தாமதமாக துவங்கியுள்ளது. மேலும் மாம்பழங்களின் வரத்து குறைவாக இருப்பதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

சேலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் சேலத்தில் விளையும் தனி சுவை மிகுந்த மாம்பழத்துக்கு உலக அளவில் நல்ல மவுசும், ஏகோபித்த வரவேற்பும் உண்டு. சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாங்காய் விளைகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் மாம்பழ சீசன் தொடங்கும்.

ஆனால் இந்தாண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதாவது, மரங்களிலேயே மா பிஞ்சுகள் உதிர்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், சங்ககிரி, மேச்சேரி, தாரமங்கலம், வாழப்பாடி, ஆத்தூர், கருமந்துறை, தும்பல், பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, நங்கவள்ளி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

ஆனால் சேலத்தில் தாமதமாக சீசன் தொடங்கி உள்ளதால் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து குறைந்தது. இதனால் 50 சதவீதம் மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக பெங்களூரா, மல்கோவா, அல்போன்சா, இமாம் பசந்த், நடுசாலை, செந்தூரா உள்ளிட்ட ரக மாம்பழங்கள் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் சேலம் கடைவீதியில் உள்ள மண்டிகளில் மாம்பழங்களை சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ மாம்பழம் ரகத்திற்கு ஏற்றவாறு ரூ.80 முதல் ரூ.300 வரைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story