சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு: 6 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது39). தொழில் அதிபர். சேலத்தில் உள்ள அவருடைய நண்பர் மூலம் அறிமுகமான ஒரு கும்பல் குறைந்த அளவு பணம் கொடுத்தால் அதிகம் பணம் தருவதாக கூறியதாகத் தெரிகிறது. வெங்கடேஷ் பணத்துடன் வந்த போது ஒரு காரில் போலீஸ் உடை அணிந்து வந்த கும்பல், அந்த பணத்தை பறித்து சென்றனர். பின்னர் இந்த பணத்திற்கு உரிய விளக்கம் அளிக்க இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி விட்டு அந்த கும்பல் காரில் சென்று விட்டது.
இதுகுறித்து, வெங்கடேஷ் இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது பணம் பறித்து சென்றவர்கள் போலீசார் இல்லை என்பது தெரிந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் என்று கூறி ரூ.50 லட்சம் பறித்து சென்ற 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பல் தலைவன் நடராஜன் (வயது50), சுஜாதா, சீனிவாசன், மகாலிங்கம், ஜெகன்மோகன், கோபி உள்பட மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணமும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.