தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி -தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய சேலம் மாணவி
தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாணவி
சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் -கோமதி தம்பதியின் மகள் மஹிதா. இவர் எமரால்டு வேலி சிபிஎஸ்சி பள்ளியில் +1படித்து வருகிறார். சிறு வயது முதல் ஸ்கேட்டிங் விளையாட்டில் பயிற்சி பெற்று பலவேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் தென்மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, வெள்ளி பதக்கம் வென்றார். இதன்மூலம் தேசிய அளவிலான போட்டிக்கு மஹிதா தேர்வு செய்யப்பட்டார். சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான போட்டி ஹரியானா மாநிலம் குர்கவ்னில் நடைபெற்றது.
இப்போட்டியில் மஹிதா பங்கேற்று, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் மத்திய பிரதேச மாணவி இரண்டாம் இடத்தையும், டெல்லி மாணவி மூன்றாம் இடத்தையும் வென்றுள்ளனர். இப்போட்டிக்கான பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தால் முழங்காலில் காயமடைந்த மஹிதாவை போட்டியில் பங்கேற்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் தன்னம்பிக்கையோடு வலியையும் பொருட்படுத்தாமல் போட்டியில் பங்கேற்று, முதலிடம் வென்று மஹிதா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாணவி மஹிதாவிற்க்கு பள்ளியின் சார்பிலும் பல்வேறு விளையாட்டு துறையை சார்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.