சென்னை-ஜெட்டா நகர் இடையே மீண்டும் விமான சேவை!!
chennai flights cancelled
சென்னையில் இருந்து சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஜெட்டா நகருக்கு நேரடி விமான சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தின்போது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சென்னை-ஜெட்டா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின்பும், சென்னை-ஜெட்டா-சென்னை இடையே நேரடி விமான சேவைகள் தொடங்கப்படவில்லை. இஸ்லாமியர்கள் தங்களது புனித தலமான மெக்கா, மதினாவுக்கு ஏராளமான பயணிகள், ஆண்டு முழுவதும் சென்று கொண்டிருப்பதால், சென்னை-ஜெட்டா இடையே, நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சவுதியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுக்கு பிறகு சென்னை-ஜெட்டா- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது. வாரத்தில் திங்கள், புதன் ஆகிய இரு தினங்கள் நேரடி விமான சேவை, சென்னையிலிருந்து ஜெட்டா நகருக்கு இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு, ஜெட்டா நகரில் இருந்து 132 பயணிகளுடன் புறப்பட்ட சவுதியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மாலை 5.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது. அதன் பின்பு அதே விமானம், நேற்று இரவு 7 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 222 பயணிகளுடன் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றது. சென்னை-ஜெட்டா இடையே இந்த நேரடி விமானத்தின் பயண நேரம் 5 மணி 30 நிமிடங்கள். இப்போது வாரத்தில் திங்கள், புதன் ஆகிய 2 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் வாரத்தில் 3 நாட்களாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் இந்த விமானம் இயக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை-ஜெட்டா- சென்னை இடையே, 4 ஆண்டுகளுக்குப் பின்பு, மீண்டும் விமான சேவைகள் புதிதாக தொடங்கியுள்ளது, பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.