பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் - வழக்கு ஒத்திவைப்பு.

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் - வழக்கு  ஒத்திவைப்பு.

பைல் படம் 

பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தார்களா? ஆசிரியர்கள் உடன் இருந்தார்களா? என்பது குறித்து காவல் துறை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோட் ஷோ நிகழ்ச்சியில் கோவையில் உள்ள சாய்பாபா வித்யாலயம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களை சீருடைகளிலேயே அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராக சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை புகழ் வடிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். பெற்றோரால் அழைத்துச் செல்லப்படாத குழந்தைகள் மட்டுமே பேரணிக்கு சென்றதாகவும், அதற்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் ? என்றும் தலைமை ஆசிரியை தரப்பில் வாதம் செய்யப்பட்டது. பிரதமர் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சியில் பிரதமர் என்ற முறையில் மோடி கலந்து கொண்டிருந்தால் அதில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் தவறில்லை. அரசியல் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றது தவறு என்றும் காவல்துறை வாதம் செய்தது. பிரதமர் மோடியின் கோவை பிரச்சார நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தார்களா? பள்ளி குழந்தைகளுடன் ஆசிரியர்கள் எவரும் இருந்தார்களா? சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும் ? என்பது குறித்து எல்லாம் காவல் துறை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags

Next Story