ஊட்டியில் பெயரளவுக்கு நடந்த பள்ளி வாகன தணிக்கை
வாகன தணிக்கை
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் ஆகிய வட்டார போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளிகளை சேர்ந்த 352 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஊட்டியில் மட்டும் 1120 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பள்ளிக்கூடத்தின் பெயர், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி, முதலுதவி பெட்டிகள், வேககட்டுப்பாட்டு கருவிகள், குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம் உள்பட 21 வகையான அரசு விதிமுறைகள் சரியாக இருக்கிறதா என சோதனை செய்யப்படும்.
கோடை சீஸன் காரணமாக ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், கோத்தகிரி, குன்னூர் என அந்தந்த பகுதிகளில் வாகனங்கள் ஆய்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. ஊட்டியில் இன்று நடைபெற்ற வாகன தணிக்கயின் போது தடை செய்யப்பட்டுள்ள 'ஏர் ஹாரன்' பயன்படுத்திய எந்த தனியார் பள்ளி வாகனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், பல தனியார் பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவிகள் சரியாக இருக்கவில்லை. மைதானத்தில் பள்ளி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு சில வாகனங்களை சுற்றி பார்த்த வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட ஆட்சியர் வருகைக்காக காத்திருந்தார். ஆட்சியர் அருணா வந்ததும் மூன்று வாகனங்களை உள்ளேயும் வெளியேயும் பார்வையிட்டுச் சென்றார். மற்றபடி இது ஒரு கண்துடைப்பு தணிக்கையாக தான் இருந்தது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், "தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி பேருந்துகள் முறைப்படுத்துதல் மற்றும் சிறப்பு விதிகள் 2012-ன்படி ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நீலகிரி மலை மாவட்டம் என்பதால் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது வாகனத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட வேண்டும், "என்றார். இந்த ஆய்வில் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நீலகிரி மாவட்ட உதவி அலுவலர் அரி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அலுவலர் தீயணைப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
அப்போது சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளும் வழங்கப்பட்டது. மேலும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பெயரளவுக்கு கண்காணிப்பு கேமரா இல்லாததது, அதிக புகைத்தன்மை உள்ள ஒரு வாகனம், படிக்கட்டு சரியாக இல்லாதது என 10 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.