பட்டுக்கோட்டை கலை இலக்கிய இரவில் திரைக்கலைஞர் ரோகிணி பேச்சு

தமிழ்நாட்டில் பெற்ற வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என பட்டுக்கோட்டை கலை இலக்கிய இரவில் திரைக்கலைஞர் ரோகிணி பேசினார்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95 -ஆவது பிறந்தநாள் விழா, 43-ஆவது கலை இலக்கிய இரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. காலை 10 மணி அளவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில், மக்கள் கவிஞர் சிலைக்கு தமுஎகச கிளை செயற்குழு உறுப்பினர் சி.மணிமாறன் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சத்தியநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு பேருந்து நிலையத்திலிருந்து, கலை இலக்கிய பேரணி கிளை துணைத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கவிஞர் சா.ஜீவபாரதி துவக்கி வைத்தார். தொடர்ந்து, சமூகநீதிப் போராளிகள் தந்தை பெரியார் சிலைக்கு க.செந்தில்குமார், மக்கள் கவிஞர் சிலைக்கு என்.சி.ரெத்தினவேலு, பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு ச.வினோத் கிருபாகரன், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மா.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர். மாலை 7 மணிக்கு கலை இரவு தொடங்கியது. கிளைத் தலைவர் முருக.சரவணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை வரவேற்றார். கவிக்குயில் மருத்துவர் மு.செல்லப்பன், தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் கலை இரவைத் துவக்கி வைத்தார். மக்கள் கவிஞர் வழியில் என்ற தலைப்பில், சமூக செயல்பட்டார், திரைக்கலைஞர் ரோகிணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது. "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பட்டுக்கோட்டை கிளை தொடர்ந்து 43 ஆவது ஆண்டாக நடத்துகின்ற இந்த கலை இரவில் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். செல்வந்தர்களிடமும், பணக்காரர்களிடமும், பெரிய நிறுவனங்களிடமும் நன்கொடைகள் பெறாமல், உழைக்கும் மக்களிடம் சென்று பத்து ரூபாய், இருபது ரூபாய் என சிறிய தொகை பெற்று அந்தத் தொகையில் இந்த மேடை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதற்காக உழைத்த அனைத்து தோழர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகளின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். அவர் முதலமைச்சர் ஆவதற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளும் ஒரு காரணம். தனக்கு பக்கபலமாக மக்கள் கவிஞரை எம்ஜிஆர் வைத்துக் கொண்டார். உழைக்கும் வர்க்கத்தினர் படும்பாடுகளை தன்னுடைய பாடல் வரிகள் மூலம் எழுதி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நாம் வெற்றி பெற்றிருக்கிறோம், தோல்வி அடையவில்லை. தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.அவர்கள், நாம் தோல்வி அடைந்ததாக கூறிக் கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கு நாம் அச்சமூட்டியிருக்கிறோம். அந்த அச்சத்தின் வெளிப்பாடுதான் இது. ஆனால் நாம் தளர்ந்து விடக்கூடாது.

மக்களிடம் உரையாடிக் கொண்டே இருக்க வேண்டும். தமிழ்நாடு சாதித்து காட்டிய வெற்றியை இன்னொரு முறை இந்திய மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். ஒரு வெற்றிதான் ஆனால் ஊரே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நாம் செய்திருக்கிறோம். இதற்காக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் முற்போக்காளர்கள், முற்போக்கு சிந்தனையை விதைத்து உள்ளார்கள். அதற்காக மக்களிடம் தலைவர்கள் பல காலமாக உரையாடிக் கொண்டே இருக்கிறார்கள், மக்களின் சிந்தனையில் முற்போக்கு எண்ணங்கள் வளர தொடங்கி இருக்கிறது. கதையின் வழியாக, பாடலின் வழியாக, சினிமாவின் வழியாக, மக்களிடம் மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணங்களை பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

"தனக்கான விடுதலையை தமிழ்நாடு உருவாக்கிக் கொள்ளும் "என்று, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட "இறுதி நாயகர்கள்" நாவலின் கதை பகுதியை சிலாகித்து பேசி, மகாத்மா காந்தி சுடப்பட்ட வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பிரார்த்தனைகளும், மகாத்மா காந்திக்கு ஜே, என்ற முழக்கங்களும் இன்று வரை தொடர்வதாக அக்கதையினை சொல்லி, பட்டுக்கோட்டையார் பிறந்த மண்ணில் அவர் பணியாற்றிய துறையில் நானும் பணியாற்றுகிறேன் என்கிற பெருமிதத்தோடு, நமக்கு வழிகாட்டும் தலைவர்களின் நோக்கங்களை, லட்சியங்களை தோளில் சுமந்து, நம்மை நாமே பாராட்டிக் கொண்டு அநீதிக்கு எதிராக இந்தியா முழுமைக்கும் கலை இலக்கிய எழுத்து வடிவங்களை கொண்டு சேர்ப்போம்" என்று பேசினார் 'தமிழர் நாகரிகம்' என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலா, 'மலையகம் 200' என்ற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, 'கடந்து வந்த பாதை' என்ற தலைப்பில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.

புதுவை உமா, கு.மல்லிகா, கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, மேட்டூர் வசந்தி, இசையந்த் ஆகியோரின் மண் மணக்கும் மக்கள் பாடல்களும், புதுகை பூபாளம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும், மக்கள் ஆட்டக் கலைகள், நாடகம், கவித்தூறல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசியை, சரிதா பாலா நேர்காணல் செய்தார். கவிஞர் நாறும்பூநாதன், கதை சொல்லி ஆனந்த் பழனிவேல் ஆகியோர் கதை சொல்லினர். விழாவில் சமூக சேவகர் எஸ்.அருள் சூசை, உடல் தானம் செய்த மருத்துவர் ச.பாலகிருஷ்ணன் மகன் மருத்துவர் பா.சதாசிவம், புற்று நோயாளிகளுக்கு முடி தானம் செய்து வரும் செய்தியாளர் தயாநிதி, 108 வாகன ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் பாராட்டப்பட்டவர். பட்டுக்கோட்டை கிளையில் சார்பில், "ஒற்றைச் செருப்புகள்" சிறுகதை தொகுப்பு இரண்டாவது பதிப்பு வெளியீடு நடைபெற்றது. எழுத்தாளர் சுமித்ரா சத்தியமூர்த்தி எழுதிய பயணம், எழுத்தாளர் பிரதிபா சந்திரமோகன் எழுதிய இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் நூல் அறிமுகம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தி.தனபால் தலைமை வகித்தார். பாரதி புத்தகாலயம் முகமது சிராஜுதீன் நூலை வெளியிட்டார். மண்ணின் புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை அறிமுகம் செய்தும், நூலை பெற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். நிறைவாக கிளைப்பொருளாளர் எல்ஐசி கா.பக்கிரிசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமுஎகச கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story