சீல் வைக்கப்பட்ட தாது மணல் குடோன் கேட் உடைப்பு: விசாரணை!
தாது மணல் குடோன்
சாத்தான்குளம் அருகே அரசால் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட தனியார் தாது மணல் குடோன் கேட் உடைக்கப்பட்டது குறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடைச்சிவிளை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தாது மணல் குடோன் செயல்பட்டு வந்தது. இதனிடையே விதிமுறை மீறியதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு அதிகாரிகள் மூலம் அந்த குடோனுக்கு சீல்வைக்கப்பட்டு மூடப்பட்டது. இதையடுத்து அரசூர்-2 கிராமநிர்வாக அலுவலர் ஆனந்த்(43) என்பவர் குடோனை கண்காணித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம்தேதி அன்று தாது மணல் குடோன் கேட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் ரஹிமா தலைமையில் சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், ஆர்ஐ.சித்ரா உள்ளிட்ட குழுவினர் தாது மணல் குடோனை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். குடோன் கேட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளதால் தாது மணலை கொள்ளை யடிக்கும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் அளித்த புகாரின்பேரில் தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர . குரூஸ் மைக்கேல் வழக்குபதிந்து விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story