தமிழ் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
ஆலோசனை கூட்டம்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் உலகநாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலுள்ள பேராசிரியர்கள், அனைத்து நிலைக் கல்வியாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், தமிழ்க்கணினித் துறையினர், தமிழ் அமைப்புகள் மற்றும் இயல் இசை நாடகக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் நெறிகாட்டுதலில் நடைபெற்ற இதற்கான கலந்தாலோசனைக் கூட்டத்தில், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், தமிழ் வளர்ச்சி கழகத்தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ் சம்பத், இந்திய வெளியுறவுத்துறை மேனாள் உயர் அலுவலர் .வெ. மகாலிங்கம், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவரும் இயக்குநருமான பேராசிரியர் சு.பாலசுப்ரமணியன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகப் புலத் தலைவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மாறி வரும் நவீன சமூகச்சூழலுக்கு ஏற்ப தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், அதற்கான முன்னெடுப்புகள் குறித்தும் தமிழ் பண்பாட்டின் அடையாளங்களைத் தக்க வைத்துப் பரப்பும் வகையிலும், பல்வேறு மொழிகள் தொடர்பான ஆய்வுகள் குறித்த ஆய்வு கட்டுரைகளை அயல்நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் இருந்து பெற்று மாநாட்டில் ஆய்வுக்கோவையாக வெளியிடுவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் அயர்விலாது தொடர்த் தமிழ்ப்பணிகளை ஆற்றி வரும் ஆளுமைகளுக்கு வளர் தமிழ் அறிஞர் மற்றும் வளர் தமிழ் மாமணி விருதுகள் இம்மாநாட்டில் வழங்கப்பட உள்ளதாகத் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் தெரிவித்தார்.