தாலி சங்கிலியை பறித்து சென்ற நபரை தேடி வரும் சேலையூர் காவல் துறையினர்
சேலையூரில் அடுத்தடுத்த நாட்களில் ஒரே நபர் இரு வேறு இடங்களில் பெண்களிடம் தாலி சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலையூர் காவல் எல்லைக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் நித்திய சுபா. இவர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் தனது மகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்தி விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது ஆஞ்சநேயர் கோவில் தெரு சந்திப்பில் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்திருந்த மர்ம நபர் பின்னோக்கி நடந்து சென்று நித்திய சுபா அணிந்திருந்த ஐந்து சவரன் தாலிச் சங்கிலயை பறித்துச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. முன்பாக அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டமிட்ட மர்ம நபர் நித்திய சுபா தனியாக வருவதை கண்டு தாலிச் சங்கிலியை திருடி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சேலையூர் காவல் துறையினர் கடந்த 22ஆம் தேதி ராஜ கீழ்ப்பாக்கத்தில் சீதாலட்சுமி என்ற மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறித்த நபரும் நேற்றைய தினம் கிழக்கு தாம்பரம் பகுதியில் நிகழ்ந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரும் ஒருவர் தான் என்பதை கண்டறிந்தனர். மதிய நேரத்தில் வெளியில் நடமாடும் வயதான பெண்களிடம் தாலிச் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உலா வரும் நிலையில் அவரைப் பிடிக்க முடியாமல் சேலையில் காவல் துறையினர் திணறி வருகின்றனர். அடுத்த அடுத்த நாட்களில் ஒரே நபர் ஒரே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது