கிடுகிடுவென நிரம்பும் செம்பரம்பாக்கம் - 6000 கனஅடி திறக்க முடிவு
செம்பரம்பாக்கம்
வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 452 கன அடியாக இருந்த நிலையில் தற்போது அது 514 கன அடியாக அதிகரித்து இருக்கிறது. 3,645 மி.கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 90 சதவீதத்துக்கும் அதிகமாக கன அடி நீர் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. ஏரி வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக செவ்வாய்கிழமை 200 கன அடி நீர் திறக்கப்பட்டு நேற்று 1000 கன அடி, 1500 கன அடி என படிப்படியாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அளவு 2,429 கன அடியாக இன்று அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கன அடி நீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 6000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அதன் கரையோர பகுதிளான அடையாறு, திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை,உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.