மூத்த பத்திரிகையாளர் வி என் சாமிக்கு கலைஞர் எழுதுகோல் விருது
2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது 50 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிக்கை துறையில் இயங்கி வரும் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர். 9-6-1931 அன்று பிறந்தவர். இளமையில் தந்தை பெரியார் அவர்களின் உதவியாளராகத் திகழ்ந்தவர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர், ‘சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ. 5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும்’ என அறிவித்திருந்தார். அதன்படி ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்கு வழங்கப்பட்டது.