முன் மாதிரி கல்வி திட்டம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர்

முன் மாதிரி கல்வி திட்டம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர்

கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

முன் மாதிரி கல்வி திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்விதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) பள்ளி கல்வித்துறை சார்பில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: இந்த முதன்மைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 13 பேர் சேர்ந்துள்ளனர். எந்தெந்த நிறுவனத்தில் என்னென்ன படிப்புகள் உள்ளன? எதைப் படித்தால் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேரலாம் என்கிற விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாதிரி பள்ளித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்.ஐ.டி., ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வருகிறோம். மேலும், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலுள்ள முதன்மைக் கல்வி நிறுவனங்களிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பலர் சேர்ந்து படிக்கின்றனர். வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை மூலம் தைவான் நாட்டில் தமிழக அரசு பள்ளியைச் சார்ந்த 2 மாணவர்கள் படிக்கவுள்ளனர். இத்திட்டத்தை இன்னும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும், இதுபோன்ற விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நிதிநிலை சரியான பிறகு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த கால ஆட்சியில் 1.25 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படாமல் விட்டுச் சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டாலும், 6 ஆயிரத்து 218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிதொழில்நுட்ப ஆய்வகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிநவீன மென்பொருள்கள் உள்பட முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.

Tags

Read MoreRead Less
Next Story