சிறைக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் சிம் கார்டு- விசாரணை

சிறையிலிருக்கும் கைதிக்கு வாழைப்பழத்திற்குள் சிம் கார்டு, மெமரி கார்டுகளை வைத்து தர முயன்ற தாய் மற்றும் நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மத்திய சிறையில் தடுப்புக் காவல் சிறைவாசியாக இருந்து வருபவர் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார். இவர்மீது சேலம் மாநகரக் காவல் நிலையங்களில் வழிப்பறி, பைக் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், 26.09.2023 அன்று டவுன் திருவள்ளுவர் சிலை அருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் விஜய் என்கிற `சைக்கோ' விஜய் எனும் நபர் நின்றுகொண்டிருந்தபோது, பிரேம்குமார் உள்ளிட்ட சிலர் பட்டாக்கத்தியால் வெட்டியுள்ளனர். இந்த வழக்கில் பிரேம்குமார் அவரது நண்பர்களை போலீஸார் கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பிரேம்குமார் இதுபோன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு வருவதால், அவர்மீது மாநகரக் காவல்துறை மூலம் குண்டாஸ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில் சிறையில் இருக்கும் பிரேம்குமாரை சந்திப்பதற்காக அவரது அம்மா தனலெட்சுமி, 19.10.2023 அன்று சேலம் மத்திய சிறைக்கு குணசீலன் என்பருடன் சென்றுள்ளார். அப்போது சிறையில் இருக்கும் பிரேம்குமாருக்காகக் கொண்டு செல்லப்பட்ட வாழைப்பழத்திற்குள் இருந்து சிம் கார்டுகள் இரண்டும், 16 ஜிபி மெமரி கார்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தனலெட்சுமி, குணசீலன் ஆகியோரை சிறை அதிகாரிகள் விசாரித்ததில், பிரேம்குமார் சிறைக்குள் இருக்கும்போது பாட்டு கேட்பதற்காக எடுத்துவரச் சொன்னதாக கூறியுள்ளனர். அதன்மூலம் மேற்கண்ட இருவரையும் அஸ்தம்பட்டி போலீஸாரிடம் சிறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன்மூலம் இருவரிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அந்த விசாரணையில் போலீஸாருக்கு மேலும் சந்தேகம் வந்துள்ளது. வெறும் சிம் கார்டும், மெமரி கார்டும் எடுத்துக்கொண்டு போய் எதில் பாட்டு கேட்பார்கள், அப்போது ஏற்கெனவே செல்போன் உள்ளே இருந்தால் மட்டுமே இதனை கொண்டுவர சொல்லிருக்க முடியும் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


Tags

Read MoreRead Less
Next Story