ஆதரவற்ற நிலையில் சகோதரிகள், அரசு உதவி செய்யுமா...?
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே காலகம் ஊராட்சிக்குட்பட்ட ஒடுக்கண்கொல்லை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (18), ஸ்ரீநிவிகா (16) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மேனகா கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் செல்வராஜூம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற ஜெயஸ்ரீ வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடராமல் நிறுத்திவிட்டார்.
தாய் தந்தை இறந்ததற்கு பின்பு எந்த வருமானமும் இல்லாமல் இருந்து வந்தனர். குடியிருந்த வீட்டை தவிர எந்த சொத்தும் இல்லாத நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த தொடர் கனமழையால் குடியிருந்த வீடும் முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமானது. இதனால் ஜெயஸ்ரீயும் ஸ்ரீநிவிகாவும் செய்வது அறியாத திகைத்து ஆதரவற்ற நிலையில் இருந்தனர். இந்நிலையில் தனது அம்மாவை பெற்ற வயதான பாட்டி வயதான காலத்திலும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் நிலையிலும் தனது மகள் வழி பேத்திகள் எந்த ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியாய் நிற்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தப் பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அவர்களை பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தற்போது கொண்டு போய் தங்க வைத்துள்ளார்.
ஜெயஸ்ரீயின் தங்கை ஸ்ரீநிவிகா படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஸ்ரீநிவிகாவை மட்டும் தற்போது பாட்டி படிக்க வைத்து வருகின்றார். இந்த நிலையில் ஜெயஸ்ரீ அரசுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். நாங்கள் இருவரும் தாய், தந்தை இழந்து வீட்டையும் இழந்து எந்த ஆதரவும் இல்லாமல் இருப்பதால் எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. வயதான காலத்தில் எனது பாட்டி மட்டுமே எங்களுக்கு தற்காலிகமாக உதவி செய்து வருகிறார். எங்களின் நிலை கருதி எனக்கு அரசு வேலை வழங்கியும் இடிந்த வீட்டை கட்டித் தரவும் வேண்டும் என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். உதவ விரும்புவோர் காலகம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமாரை தொடர்பு கொள்ளலாம் 9677515803