டெலிகிராமில் குறுஞ்செய்தி : ரூ.4¾ லட்சம் லட்சத்தை இழந்த குடியாத்தம் டிரைவர்!

டெலிகிராமில் குறுஞ்செய்தி :  ரூ.4¾ லட்சம் லட்சத்தை இழந்த குடியாத்தம் டிரைவர்!

சைபர் கிரைம் காவல் நிலையம்

ஆன்லைனில் பகுதி நேர வேலை என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி குடியாத்தத்தைச் சேர்ந்த டிரைவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது செல்போன் டெலிகிராமில் ஆன்லைனில் பகுதிநேர வேலை உள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. அதில் உள்ள லிங்கில் சென்று பார்த்தபோது குறிப்பிட்ட ஓட்டல்களில் முன்பதிவு செய்து அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினால் கமிஷன் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அதில் குறிப்பிட்டிருந்த சில ஓட்டல்களை முன்பதிவு செய்து முதற்கட்டமாக ரூ.700 கமிஷனாக பெற்றுள்ளார். பின்னர் ஆன்லைனில் முதலீடு செய்யும் டாஸ்க்கை முடித்தால் இதைவிட அதிக கமிஷன் கிடைக்கும் என்று கூறி மற்றொரு லிங்கை மர்மநபர் அனுப்பி உள்ளார்.அதனை நம்பிய அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த மாதம் 11-ந் தேதி வரை ரூ.4,92,135 செலுத்தி அந்த லிங்கில் உள்ள டாஸ்க்கை முடித்துள்ளார். பின்னர் அதற்கு கமிஷன் பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் அவருக்கு ஆன்லைன் டாஸ்க் என்றுகூறி பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story