இந்தோனேசியாவிலிருந்து ரூ.4 கோடி மதிப்பிலான பாக்கு கடத்தல் - விசாரணை
ரவிக்குமார்
தூத்துக்குடி துறைமுகம் வழியாக போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக வரி ஏய்ப்பு செய்து கடத்தல் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகம் வந்த ஒரு கண்டெய்னர் பெட்டியை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு சோதனை செய்தனர். அந்த கண்டெய்னர் பெட்டியில் பஞ்சு கந்தல் என்ற பெயரில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 65 மெட்ரிக் டன் கொட்டைப்பாக்கை மறைத்து வைத்து கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த கடத்தல் தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவிக்குமார் என்ற ரவி பகதூர் என்பவரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடத்தலில் தொடர்புடைய சுங்க இலாகா அதிகாரிகள் குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.