தேவனூர் திருக்களப்பூரில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டாரம் தேவனூர் மற்றும் திருக்களப்பூர் ஆகிய கிராமங்களில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மண் மாதிரி சேகரித்தல் முகாம் நடைபெற்றது .
ரசாயன உரங்களின் அளவுக்கு அதிகமான உபயோகத்தை தடுக்கவும், உர செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மண் பரிசோதனை அவசியமாகும். பயிர் அறுவடைக்குப்பின் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.
எனவே மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை அறிய வேண்டும். மேலும்,மண்ணில் உள்ள களர் அமிலத்தன்மைகளை அறிந்து சீர்திருத்தம் செய்திட இடவேண்டிய தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு ஆகியவற்றின் அளவை அறிந்து இடலாம் .மண்ணின் உவர் தன்மையை அறிந்து வடிகால் வசதியை பெருக்கலாம். மண்மாதிரிகளை வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் , உரங்கள் ,பூச்சி மருந்துகள் இடப்பட்ட பகுதிகளிலும் எடுக்க கூடாது.மண் மாதிரிகளை எடுக்க வேண்டிய இடத்தில் இலை, சருகு, ஆகியவற்றை கையினால் மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
மாதிரி எடுக்கும்பொழுது ஆங்கில எழுத்து "V"போல் மண்வெட்டியால் இருபுறமும் வெட்டி அந்த மண்ணை நீக்கிவிட வேண்டும். பிறகு நிலத்தின் மேல் மட்ட பகுதியில் இருந்து கொழு ஆழம் வரை இரண்டரை சென்டிமீட்டர் பருமனில் மாதிரி சேகரிக்க வேண்டும். இவ்வாறு ஒரு எக்டரில் 10 முதல் 20 இடங்களில் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும் ஆழமானது திட்டமிடும் பயிரின் வகையை பொறுத்து மாறுபடும். சேகரிக்கப்பட்ட மண்மாதிரியை சுத்தமான சாக்கு அல்லது பாலிதீன் தாள் மீது பரப்பி அதனை நான்காக பிரித்து எதிர் முனைகளில் காணப்படும் இரண்டு பகுதிகளை கழித்து விட வேண்டும். தேவைப்படும் 1/2 கிலோ வரும் வரை இம்முறையினை திரும்ப திரும்ப கையாள வேண்டும். சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு துணிப்பை அல்லது பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரி பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும் .உரம் மற்றும் பூச்சி மருந்து வைக்கப்பட்டிருந்த சாக்குகள் அல்லது பைகளை மண்மாதிரி அனுப்ப உபயோகிக்க கூடாது .இந்த முகாம்களில் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, அரியலூர் மண் பரிசோதனை நிலையம் வேளாண்ம அலுவலர் ஜான் ரிச்சர்ட் ராஜ் , துணை வேளாண்மை அலுவலர் குணசேகரன், வேளாண்மை உதவி அலுவலர்கள் நித்தீஸ்வரன், ராதா தோட்டக்கலை உதவி அலுவலர் செல்வகுமார் வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.