ரூ100 கோடி கோவில் நிலத்தை அபகரித்த பாஜக MLA மகன்!

ரூ100 கோடி கோவில் நிலத்தை அபகரித்த பாஜக MLA மகன்!

நயினார் நாகேந்திரன்

ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை மோசடியாக அபகரித்த தமிழக பாஜக எம்எல்ஏவின் மகன் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்துக்களின் பாதுகாவலர்களாகவும், இந்துக் கோவில்களின் தூண்களாகவும் தங்களை காட்டிக் கொள்ளும் பாஜகவினர், மதத்தின் பெயரால் அத்துமீறி செயல்படுவதும், கோவில் நிலங்களை அபகரிப்பதும் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் திருக்கோயில்களை பராமரிப்பதாக கூறிக்கொண்டு சிலர் நிதி திரட்டி சிக்கியதும் மக்கள் அறிந்ததே. இந்த நிலையில், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அறப்போர் இயக்கத்தின் புலனாய்வு விசாரணையில், திருநெல்வேலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நில அபகரிப்பு புகாரில் சிக்கினார். இவர் தமிழக பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 1 புள்ளி 3 ஏக்கர் நிலப்பரப்புள்ள சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிலத்தை, இளையராஜா என்பவரிடம் இருந்து நயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்தது. சென்னையில் உள்ள அந்த நிலத்தை நயினார் பாலாஜி வாங்கியதற்கு நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளும் துணை போனதாக அறப்போர் குற்றஞ்சாட்டியது. மேலும், சென்னை வடபழனியில் இருந்து பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயில்பாதை அமைக்கப்பட்டு வருவதால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்திய அந்த கோவில் நிலத்தை மீட்க, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோசடியாக செய்த அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியது. அது மட்டுமின்றி ,மோசடியான பத்திரப்பதிவு செய்த நயினார் பாலாஜி மற்றும் இளையராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு சில மாதங்களுக்கு முன்பு அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த மோசடி புகாரை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும், அவரது மகன் நயினார் பாலாஜியும் மறுப்பு தெரிவித்தனர். உரிய ஆவணங்கள் அடிப்படையில் தான் பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக பதில் அளித்தனர். ஆனால் அறப்போர் இயக்கம் தொடர்ந்து ஆவணங்களையும், புகார்களையும் தெரிவித்து வந்தது.

இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தியதில்,சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 1 புள்ளி 3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நிலத்தின் பத்திரப்பதிவை நெல்லை மண்டல துணை பத்திரப்பதிவுத் தலைவர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நயினார் பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 15 நாள்களில் நடவடிக்கை எடுக்க தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் திமுக மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் அவதூறு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்று ஆருத்ரா கோல்டு, ஹிஜாவு போன்ற மோசடிகளில் தொடர்புடைய பாஜக வினரையும் கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Next Story