ஸ்ரீவைகுண்டம் : தீவுகளாக மாறிய 25 கிராமங்கள் - மக்கள் தவிப்பு

ஸ்ரீவைகுண்டம் :  தீவுகளாக மாறிய 25 கிராமங்கள் - மக்கள் தவிப்பு

வெள்ள பாதிப்பு 

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை வெள்ளத்தால் 25 கிராமங்கள் தீவுகளாக மாறி உள்ளன. மின்சாரம் இல்லாததால் மக்கள் இருளில் தவித்து வருகிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஸ்ரீவைகுண்டம் பழைய பாலம், புதிய ஆற்றுப்பாலம் அருகே கரைகள் உடைந்து ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பலர் வீடுகளில் சிக்கி தத்தளித்தனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை இடிந்து மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் நகரில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். 1 வாரத்திற்கு மேலாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கடும் வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் முதல் ஏரல் வரையிலான வடகால் வாய்க்கால் வழியாக செல்லும் சாலைகள் முற்றிலுமாக உருக்குலைந்து போய் உள்ளன.

குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், குருஸ்கோவில், அருந்ததியர்காலனி, கோவில்பத்து, பெரும்பத்து, முன்னீர்காலனி, நாராயணபுரம், பராங்குசநல்லூர், பேட்துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர மருத்துவர்காலனி, ராமநாதபுரம், களங்குடி, நலன்குடி, நளராஜபுரம், இசக்கியம்மாள்புரம், பத்மநாபமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் கடும் சேதம் அடைந்து, மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இதேபோன்று காடுவெட்டி பாலம் உடைந்து கட்டையம்புதூர், வரதராஜபுரம், தெய்வநாயகபுரம், அப்பன்கோவில், சிவராமமங்கலம், இரட்டைதிருப்பதி, மங்களாபுரம், மங்களகுறிச்சி வரை ஆற்றின் கரைகள் உடைந்து ஏரல் செல்லும் சாலைகள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன. ஒட்டுெமாத்தமாக ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம், சாலை துண்டிக்கப்பட்டு தனித்தீவாக காட்சி அளிக்கிறது. இதனால் கிராம மக்கள் இருளில் மூழ்கி உள்ளனர்.

இந்த பகுதிகளில் மழைத்தண்ணீர் வடிந்தும், கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஸ்ரீவைகுண்டம் முதல் ஏரல் வரை செல்லும் வடகால் வாய்கால் சாலைகளை உடனடியாக சீரமைக்கவேண்டும். மின்சாரம் இல்லாமல் இருக்கும் கிராமங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story