புதிய கல்விக் கொள்கைக்கு பெயர் மாற்றிக் கொண்டார் ஸ்டாலின் - அண்ணாமலை

புதிய கல்விக் கொள்கைக்கு பெயர் மாற்றிக் கொண்டார் ஸ்டாலின் - அண்ணாமலை

அண்ணாமலை 

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மத்திய அரசு 2020-ல் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் காலை உணவு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு நிதி வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய கல்விக் கொள்கை மிக சிறப்பான திட்டங்களைக் கொண்டது. ஒரு மாநில அரசு அதனை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால், தமிழக அரசு அதனை ஏற்காமல் விதண்டாவாதம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை யார் செய்தாலும் அதை வரவேற்க வேண்டும். காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியங்கள் முட்டை உள்பட சத்தான உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு 100 சதவீதம் தயாராக உள்ளது. ஆனால், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காமல் அதன் பெயரை மாநில கல்விக் கொள்கை என்று மாற்றி, அறிக்கை தயார் செய்து வைத்துக் கொண்டு, அதனை வெளியிடாமல் உள்ளது.

நீட் தேர்வு தேவை என்பது எங்கள் நிலைப்பாடு. நீட் தேர்வு வருவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்பது குறித்தும், முதல் தலைமுறை பட்டதாரிகள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர் என்பது குறித்தும் விவரங்களை வெளியிட கேட்கிறோம். ஆனால் தமிழக அரசு, இதுவரை விவரங்களை வெளியிடவில்லை. மருத்துவக் கல்லூரிகளில் சேர நடுத்தர ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு தான் உதவி செய்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சரணடைந்தவர் ரவுடி திருவேங்கடம். அவர் ஏன் தப்பி ஓட வேண்டும்? அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். போலீஸார் வெளியிட்டுள்ள குற்றவாளிகள் படம், சிசிடிவி காட்சிகள் போன்றவை அவர்கள் தான் கொலையில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை இவர்கள் ஏன் கொலை செய்தார்கள்? இவர்களை ஏவியது யார்? அரசியல் காரணமா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? இதையெல்லாம் விசாரிக்கத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.'' என்று கூறினார்.

Tags

Next Story