உளுந்து சாகுபடியில் தீவிரம் காட்டும் கடைமடை விவசாயிகள்
சேதுபாவாசத்திரம் கடைமடையில் சம்பா சாகுபடி கைவிட்டு போன நிலையில் உளுந்து சாகுபடி தீவிரம்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடையில் சம்பா சாகுபடி கைவிட்டு போன நிலையில் உளுந்து சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சேதுபாவாசத்திரம் கடைமடையில் சுமார் 50 ஆண்டுகளாக ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் பெரும் பாலான இடங்களில் சம்பா சாகுபடி நடைபெறாமல் விளைநிலங்கள் அனைத்தும் தரிசாக கிடக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ள சேதம் ஏற்பட்ட நிலையிலும் கூட, தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடையில் மழையின்றி ஏரி, குளங்கள் நிரம்பாமல் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஆனால் பல்வேறு பகுதிகளில் ஏரி பாசனம் மற்றும் நேரடி பாசன பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் நேரடி விதைப்பு மட்டுமே செய்து உள்ளனர். ஆனால் ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள ஒரு சிலர்மட்டும் நடவு பணி செய்துள்ளனர். மற்ற விவசாயிகள் யாரும் சாகுபடியை நினைக்கவில்லை. சம்பா சாகுபடி கைவிட்டு போன நிலையில் நேரடி விதைப்பு செய்த நிலங்கள் தவிர்த்து மற்ற நிலங்களில் கடைமடை விவசாயிகள் நிலக்கடலை மற்றும் உளுந்து போன்ற பணப்பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.
Next Story