புதிய வாழ்வை துவங்குகிறேன் - நீண்ட கால சிறை கைதி நெகிழ்ச்சி

புதிய வாழ்வை துவங்குகிறேன் - நீண்ட கால சிறை கைதி நெகிழ்ச்சி

 ஊமைல் பாபு 

நீண்ட போராட்டத்திற்கு பின்பு விடுதலை கிடைத்து இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி, 19 வயசில் சிறைக்கு சென்ற நான் , 54 வயதில் மீண்டும் புதிய வாழ்வை துவங்க உள்ளேன். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும் எந்த பாகுபாடு இல்லாமல் விடுவிக்க வேண்டும் என கோவை சிறையில் இருந்து விடுதலையான ஊமைல் பாபு தெரிவித்தார்.

கோவை:பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நீண்ட காலம் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வரும் தண்டனை கைதிகள் நன்னடைத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் தமிழக அரசு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 15.9.23 ம் தேதி விடுவிக்க கோவை சிறை கைதிகள் ஆறு பேர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 12 சிறை கைதிகள் பட்டியலை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இந்த கோப்பு நீண்ட பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆளுநர் கைதிகளை விடுவிக்க அனுமதி அளித்தார். இதனை அடுத்து கடலூர், கோவை,சென்னை, வேலூர் ஆகிய நான்கு சிறைகளில் இருந்து 12 சிறை கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கோவை சிறையில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் விஸ்வநாதன், பூரிகமல்,அபுதாஹிர், ஹாருன் பாட்ஷா,சாகுல் ஹமீது, ஊமைல் பாபு ஆகிய ஆறு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பேருக்கும் கடந்த ஒரு மாதமாக பரோல் வழங்கப்பட்டு அவரவர் வீடுகளில் இருந்தனர்.

இந்நிலையில் ஆளுநர் உத்தரவு கிடைக்கப்பட்ட நிலையில் இன்று ஆறு பேரும் கோவை மத்திய சிறைக்குச் சென்று கையெழுத்திட்டு முறைப்படி விடுதலையானார்கள்.ஆறு பேரும் வெவ்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு நீண்ட வருடமாக சிறையில் ஆயுள் தண்டணையுடன் இருந்து வந்த நிலையில் விடுவிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் கோவையில் வீரசிவா என்பவர் கொலை வழக்கில் ஆயுள்தண்டணை அனுபவித்து கோவை சிறையில் இருந்து விடுதலையான ஊமைல் பாபு இன்று பேட்டியளித்தார்.

அப்போது நீண்ட போராட்டத்திற்கு பின்பு விடுதலை கிடைத்து இருப்பதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட விடுதலைக்கு உதவிய அனைத்து அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும் இந்து,முஸ்லீம் என எந்த பாகுபாடு இல்லாமல் விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர் 19 வயசில் சிறைக்கு சென்ற நான் , 54 வயதில் மீண்டும் புதிய வாழ்வை இனிதான் துவங்குவதாகவும், யாரெல்லாம் இதற்காக போராடினார்களோ,கையெழுத்து போட்டார்களோ அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் சிறையில் இருந்து விடுதலையான ஊமைல் பாபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Tags

Next Story