தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயல் கூண்டு ஏற்றம்
மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு மிதிலி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு நோக்கி நகரும். இது நாளை நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்கதேச கடற்கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் 60 கிலோமீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படாததால் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்றுள்ளனர்.