நீலகிரியில் துவங்கியது ஸ்ட்ராபெரி சீசன்!
நீலகிரி மாவட்டத்தில் 1,33,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை, 17,000 ஏக்கர் காபி, 2,400 ஏக்கர் பரப்பளவில் மிளகு, 2,000 ஏக்கரில் ஏலக்காய், 17,000 ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் உட்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 4 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். வட இந்தியாவில் அசாம் தேயிலையை போல் தென்னிந்தியாவில் நீலகிரி தேயிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக உரிய விலை கிடைப்பதில்லை. தேயிலை விவசாயத்தை கைவிட்டு சமவெளி பகுதிக்கு மற்ற வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.
இந்த நிலையில் தேயிலை உள்ளிட்ட ஒரு சில நீண்ட கால பயிர்களுக்கு பதிலாக கொய்மலர் சாகுபடி மற்றும் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி உள்ளிட்டவற்றில் நீலகிரி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு ஏற்ற கால நிலை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நிலவுவதால் விவசாயிகள் பசுமை குடில் அமைத்து விவசாயம் ஸ்ட்ராபெரி விவசாயம் செய்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இது வரை சுமார் 500 ஏக்கர் வரை ஸ்டிராபெரி சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஸ்டிராபெரி பழ சீசன் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் ராஜேந்திரன் கூறியதாவது:- ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி செய்ய பசுமை குடில் அமைத்தல், சிறிய சுரங்க மாதிரி அமைத்தல், திறந்தவெளி என 3 விதமாக சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலும் பசுமை குடில் முறை பின்பற்றப்படுகிறது. ஸ்ட்ராபெரி செடிகள் நடவு செய்து 3 மாதத்திற்கு பின் ஸ்ட்ராபெரி பழங்களை அறுவடை செய்ய முடியும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பழங்களை அறுவடை செய்ய முடியும். புனேவில் இந்த ஆண்டிற்கான ஸ்ட்ராபெரி சீசன் முடிவடைந்ததை அடுத்து நீலகிரியில் விளைவிக்க கூடிய ஸ்ட்ராபெரிக்கு அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது.
விவசாய நிலத்திற்கே நேரடியாக வரும் வியாபாரிகள் ஒரு கிலோ பழத்தை ரூ.300 வரை கொடுத்து வாங்கி செல்ககின்றனர். இதேபோல் ஸ்ட்ராபெரி பழங்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஸ்ட்ராபெரி பழங்கள் சுவை மிகுந்து இருப்பதால் வெளி மார்கெட்டில் ஒரு கிலோ ரூ.500 வரை விற்பனை செய்யபடுகிறது. ஸ்ட்ராபெரி பழ சாகுபடிக்காக ஒரு முறை பசுமை குடில் அமைத்தால் 10 வருடங்கள் வரை அதை பயன்படுத்தலாம்.
தேவைப்பட்டால் அதில் மாற்றுப் பயிறும் பயிரிட்டு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், "நீலகிரி மலை காய்கறிகளைப் போல ஸ்ட்ராபெரி பழங்களுக்கும் கூடுதல் சுவை இருப்பதால் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளிடையே ஸ்ட்ராபெரி சாகுபடி செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. நீலகிரியில் ஸ்டாபெரி பழ சாகுபடியை ஊக்குவிக்க தோட்டகலைத் துறை மூலம் பசுமை குடில் அமைக்கவும், நாற்றுக்கள் வாங்கவும், சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்கபட்டு வருவது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது," என்றார்.