ஆ.ராசாவுக்கு ஆதரவு - ஆட்சியர் மீது உதவி செலவின கணக்கீட்டாளர் புகார்

ஆட்சியர் அருணா

உதவி செலவின கணக்கீட்டாளர் சரவணன்
இந்தியாவில் 7 கட்டங்களாகவும், தமிழகத்தில் ஒரே கட்டமாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான கடந்த 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவ்வளவு தொகை செலவிடலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரையறை வகுத்துள்ளது.
அதன்படி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம். இந்த தொகையை தாண்டி செலவு செய்தால் அந்த வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் செலவு செய்த தொகையை முதல் கட்டமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவுக்கு, செலவினங்களை கணக்கிடும் அதிகாரிகள் வைத்துள்ள கணக்குக்கும் சில வித்தியாசங்கள் வருவது வழக்கம். தேர்தல் முடிந்து 30 நாட்கள் நேரம் இருப்பதால் இறுதியில் இந்த விஷயங்கள் சரி செய்யப்படும்.
நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா முதற்கட்டமாக, கடந்த 8ம் தேதி வரை தாக்கல் செய்த செலவு கணக்கு விவரப் படி ரூ.13 லட்சம், ஆனால் தேர்தல் செலவின அதிகாரிகள் கணக்கீட்டின் படி ரூ.54 லட்சம் எனும் போது ரூ. 41 லட்சம் வேறுபாடு வருகிறது. தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அருணா செயல்படுவதாக, உதவி தேர்தல் கணக்கீட்டாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு சரவணன் அனுப்பி உள்ள புகாரில் குறிப்பிப்பட்டுள்ளதாவது, நான் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சார் கருவூலகத்தில் தலைமை அலுவலகத்தில் உதவி செலவின கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறேன். தேர்தல் செலவு விவரங்களை கணக்கிட்ட போது தி.மு.க., வேட்பாளர் தாக்கல் செய்த செலவில் பல லட்சங்கள் வித்தியாசம் உள்ளது. நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான அருணா, ஆ.ராசாவின் செலவின விவரங்களை குறைத்துக் காட்ட வலியுறுத்துகிறார். செலவின விவரங்களை ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு கொண்டுவரச் சொல்லி பார்வையிட்டு ஆவணங்களை நகலெடுத்துக் கொண்டார்.வேட்பாளரின் செலவு விவரங்களில் ஏதாவது பாதகமாக நடந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். தேர்தல் பணிகளை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த இடையூறு செய்கிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து நீலகிரி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அருணா கூறுகையில், "தேர்தல் விதிமுறைப் படி, நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் செலவின விவரங்களையும் நான் அவரிடம் கேட்டேன். தி.மு.க., வேட்பாளரின் செலவு விவரங்கள் மட்டும் உள்ளதாக சார் கருவூலக தலைமை அலுவலகத்தில் உதவி செலவின கணக்கீட்டாளர் சரவணன் கூறினார். இதனால் அதை மட்டும் நான் பார்வையிட்டேன். மேலும் அனைத்து விவரங்களையும் ஏன் தரவில்லை என அவரை கண்டித்தேன். தேர்தல் விதிமுறைப்படி தான் செயல்படுகிறேன்," என்றார்.


