இந்தியா கூட்டணிக்கு ஆதரவு : தமிழர் தேசிய முன்னணி முடிவு

பழ. நெடுமாறன்
தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் தலைமையில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாசிச பாஜக வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டில் நிலவாது. பாசிச சர்வாதிகார, இந்துத்துவா ஆட்சி நிலை நிறுத்தப்படும்.
மதச் சிறுபான்மையினர் மற்றும் உள்ள பொது சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவர். சமஸ்கிருத மொழியும், பண்பாடும் திணிக்கப்படும். மனித உரிமைகள் துச்சமாக மதிக்கப்பட்டு தூக்கி எறியப்படும். ஒட்டுமொத்தமாக நாட்டின் ஜனநாயகத்துக்கு நேரிடக்கூடிய பேரபாபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு பாஜக கூட்டணியை அடியோடு முறியடிக்க வேண்டும். அதற்குரிய வலிமையும், தற்போதைய சூழ்நிலையும் இந்தியா கூட்டணி தவிர வேறு எந்த அணிக்கும் இல்லை என்பது அப்பட்டமான உண்மை. எனவே இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்குமாறு மக்களுக்கு தமிழர் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி மாநிலத் தலைவர் முத்தமிழ்மணி, பொதுச் செயலர்கள் தமிழ்மணி, பசுமலை, துணைத் தலைவர்கள் முருகேசன், பானுமதி, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பொன். வைத்தியநாதன், உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
