தமிழகத்தில் மின்வெட்டு இல்லா நிலையை வேண்டும்:எஸ் டி பி ஐ

தமிழகத்தில் மின்வெட்டு இல்லா நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு, குறைந்த மின் அழுத்தம் துவக்கத்திலேயே சரிசெய்து மின்வெட்டு இல்லா நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பரவலாக ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மின்விசிறி உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியாமல் முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் தவிக்கின்றனர். கோடை காலங்களில் மின் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் சூழலில், நேற்று முதல் முறையாக தினசரி மின் நுகர்வு 20 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மே மாதம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மின்பற்றாக்குறை காரணமாக இன்னும் அதிகமான மின்வெட்டு இருக்க வாய்ப்பு ஏற்படும் சூழல் உள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக நிகழும் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்விசிறியை கூட இயக்க முடியாத அளவுக்கு நிலைமை சென்றுகொண்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்கால அடிப்படையில் துவக்கத்திலேயே இதனை சரிசெய்து மின்வெட்டு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story