ஆளுநர் திரித்துக் கூறுகின்ற வரலாறுகளை தமிழ்நாடு ஏற்காது

ஆளுநர் திரித்துக் கூறுகின்ற வரலாறுகளை தமிழ்நாடு ஏற்காது

கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் 

ஆளுநர் திரித்துக் கூறுகின்ற வரலாறுகளை தமிழ்நாடு ஏற்காது என கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய தலித் உச்சி மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சமூக நீதிக்காக போராடும் அமைப்புகள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை ஒரு கோடி பொதுமக்களின் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த மாநிலங்களில் கையெழுத்து இயக்கம் துவங்குகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது.இந்த கையெழுத்து இயக்கத்தை கோவை எம்.பி பி.ஆர் நடராஜன் துவக்கி வைத்தார். காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் உட்பட பல்வேறு திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் பட்டியல் இன மக்களின் கோரிக்கைகளாக, "பொது சொத்துகளில் பட்டியல் இன மக்கள் உரிய பங்கினை பெற சட்டம் இயற்ற வேண்டும்,நிலமற்ற கிராமப்புற மக்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கி பட்டியல் சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் அம்மக்களிடமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும், கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் உறுதியான முறையில் அமல்படுத்தி குழந்தை தொழிலாளர் முறையை அடியோடு ஒழித்திட வேண்டும்,அரசு கொள்முதல் ஒப்பந்தங்கள் வணிகம் ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்,புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற்று அரசாங்கம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமலாக்கி கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய ஒடுக்கு முறையை தடுத்திட வேண்டும்,தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கி அரசு துறைகளில் உள்ள இட ஒதுக்கீடு நிலுவை காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,பதவி உயர்வில் இடஒதுக்கீடு மீட்கப்பட வேண்டும்,மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் எனும் நடைமுறையை தடை செய்ய வேண்டும்,மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்தி கூலி நிலுவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்,200 நாட்கள் வேலை 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்,பட்டியல் சாதி பழங்குடி வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகாத வகையில் அமல்படுத்தி விரைவு நீதிமன்றங்கள் அமைத்திட வேண்டும், பட்டியல் சாதி துணை திட்டத்திற்கு ஒன்றிய அரசின் நிதி முறையாக ஒதுக்கப்படுவதையும் செலவிடப்படுவதையும் உறுதி செய்திட சட்டம் இயற்ற வேண்டும்,சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,சாதி ஆவண படுகொலைகளை தடுத்திட தனி சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி பிஆர் நடராஜன் ஹைதராபாத்தில் கூடிய அந்த உச்சி மாநாடு என்பது நாடு முழுவதும் இருக்கக்கூடிய பட்டியல் இன மக்கள் ஜனநாயகத்தை நேசிக்கக் கூடிய மக்கள் இடையே கையொப்பம் பெற்று ஒன்றிய அரசின் குடியரசு தலைவரிடத்தில் தருவதற்காக டிசம்பர் நான்காம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த தீர்மானித்திருப்பதாக கூறினார். அதன்படி இன்று கோவையில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்தான கேள்விக்கு பதில் ஆளுநர் அதிகமான விஷயங்களை உளறிக் கொண்டிருப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆளுநரின் வேலையை பார்க்காமல் ஆராய்ச்சி வேலைகளை தவறான முறையில் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை என்று ஆளுநர் கூறினால் கோல்வார்க்கர் ஆரியம் சம்பந்தப்பட்ட புத்தகத்தை அவர் ஏன் எழுதினார் என கேள்வி எழுப்பினார்.ஆளுனர் ஆர்எஸ்எஸ் சேர்ந்தவர் எனவும் எனவே இவர் அதையும் படிக்கவில்லை என்று தான் அர்த்தம் என தெரிவித்தார்.எனவே ஆளுநர் ஆளுநர் வேலையை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் இல்லையெனில் வரலாற்றை படித்து விட்டு பேச வேண்டும் எனவும் திரித்துக் கூறுகின்ற வரலாறுகளை தமிழ்நாடு ஏற்காது என தெரிவித்தார்.மேலும் சூயஸ் திட்டம் குறித்தான கேள்விக்கு இது அதற்கான மேடை இல்லை எனவும் அதற்கு கண்டிப்பாக வேறு இடத்தில் பதில் அளிப்போம் என தெரிவித்தார்.தசரா பண்டிகையின் பொழுது சாதி பிராந்தியத்தை வேரறுத்து சமூக நல்லிணக்கத்தை காப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று பிரதமர் பேசியது குறித்தான கேள்விக்கு அப்படி என்றால் ஆளுநரை நியமித்தவரே பிரதமர் தான் எனவும் அவர் அப்படித்தான் பேசுவார் எனவும் நான்கு மாநில தேர்தலுக்காக அப்படித்தான் பேசிக் கொண்டிருப்பார் எனவும் இன்னும் அதிகமான விஷயங்களை அவர் ஏற்றுக் கொள்ளாத விஷயங்களை மறைத்துப் பேசுகின்ற விஷயங்களை தொடர்ந்து பேசுவார் என பதில் அளித்தார்.அதனைத் தொடர்ந்து பேசிய ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், பட்டியல் இன மக்களின் பல்வேறு தேவைகளை தீர்க்க வேண்டிய அவசியம் தற்பொழுது உள்ளது எனவும் குறிப்பாக ஆணவ படுகொலைக்கான தனி சட்டத்தை இயற்ற வேண்டும் என தெரிவித்தார். மேலும் இம்மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் தற்பொழுது இவர்கள் கையில் இல்லை எனவும் அந்த நிலங்களை அரசாங்கம் மீட்டு தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தவர் இதுகுறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்கின்ற வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story