திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
திருச்செந்தூர் முருகன் கோவில்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை முதல் தேதியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணியளவில் தீா்த்தவாரி, தொடா்ந்து உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகின்றன. இதே போல சித்திரை வசந்த விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஏப்.23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருக்கோயில் வளாகத்தில் வைத்து காலை 8 மணிக்கு நாகஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறும். காலை 10.30 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்படுகிறது.
மாலை 3 மணிக்கு இந்து துவக்கப் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழு தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், செந்தில்முருகன், ராமதாஸ், கணேசன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.