இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி

இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி

செல்வப்பெருந்தகை

மக்களவைத் தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, தமது பரப்புரையில் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை கூறிவருகிறார் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடக்கத்தில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கையைப் போல் இருப்பதாக கூறினார் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகள் பெறுபவர்கள் என்றும் முத்திரை குத்தி, தனியாரிடம் இருக்கும் செல்வங்களை கைப்பற்றி முஸ்லிம்களுக்கு மறுவிநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அவதூறான கருத்துகளை கூறினார்.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுகள் நியாயமற்றவை என்ற அடிப்படையில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று நேற்று பிரதமர் மோடி மும்பையில் குற்றம்சாட்டி பேசியிருக்கிறார்.இதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை ? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பொறுத்தவரை இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் சம உரிமையோடு சம வாய்ப்போடு வாழ்வதற்கான உறுதிமொழிகளைத் தான் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

பிரதமர் மோடி தனது அவதூறு பிரச்சாரத்தின் மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார் அதில் அவர் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.டாக்டர் அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததாகவும் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்க விரும்புகிறது என்ற குற்றச்சாட்டை மோடி திரும்பத் திரும்ப கூறி வருகிறார். சமூக, கல்வி, பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் தன்மையின் அடிப்படையிலும், சச்சார் குழு பரிந்துரையின் பேரிலும் முஸ்லிம் சமூகங்கள் மாநில, ஒன்றிய ஒ.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன முஸ்லிம்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு இப்படி ஒதுக்கீடு வழங்கியிருக்கும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும் மோடி 12 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த குஜராத் மாநிலத்தில் கூட ஒ.பி.சி. பட்டியலில் முஸ்லிம் சமூகங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

மக்களவை தேர்தல் தொடங்கியதிலிருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வந்த பிரதமர் மோடி, திடீரென ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்து, முஸ்லிம் பாகுபாடு அரசியல் செய்ய மாட்டேன் அப்படி அரசியல் செய்யும் நாளில் நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக ஆகிவிடுவேன் என்று திடீரென தனது கருத்தை மாற்றிக் கொண்டு அந்தர் பல்டி அடித்திருக்கிறார். இதற்கு என்ன காரணமென்றால் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவதை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிராக தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதோடு, இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50 சதவிகித உச்சவரம்பை உயர்த்துவோம் என்று கூறியதற்கு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமுதாயத்தினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது இதனால், மக்களவை தேர்தல் அரசியல் சூத்திரம் தலைகீழாக மாறி வருகிறது.

இதன்மூலம் ஏற்பட்ட சமூகநீதிப் புயலால் மோடியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு தீங்கு விளைவிக்கிற தரம் தாழ்ந்த நச்சுக் கருத்துகளை பிரதமர் மோடி பேச, அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி தனது பரப்புரையில் கூறியுள்ளதை போல, 2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என்பதே இன்றைய தேர்தல் களம் கூறுகிற செய்தியாகும். இதன்மூலம் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிற காலம் ஏற்படுவதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது எனதெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story