திருச்செந்தூர் கோவிலில் தாராபிஷேகம் தொடக்கம்!
தாராபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 ஆண்டுகளுக்கு பின்னர், மூலவருக்கு தாராபிஷேகம் எனும் சிறப்பு பூஜை மீண்டும் இன்று முதல் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் என 3 வேளைகளில் அபிஷேகம் நடந்து வருகிறது. மேலும் மூலவர் வெப்பத்தை குறைக்கும் வகையில், தாராபிஷேகம் உபயதாரர்கள் கட்டணம் செலுத்தி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்று வந்தது. இதனை முன்னிட்டு கந்த சஷ்டி யாகசாலை மண்டபத்தில் தாரா ஹோமம் நடைபெறும். இதனையடுத்து மூலவருக்கு வெள்ளி கொப்பரை துவாரத்தின் வழியாக சுமார் 100 லிட்டர் பால் மூலம் தாராபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகங்களில் பக்தர்கள் கட்டண தரிசனத்திலும், இலவசமாக பொது தரிசனப்பாதையிலும் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்த தாராபிஷேகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் மூலவருக்கு வெப்பத்தை குறைக்கும் வகையில் தாராபிஷேகம் எனும் சிறப்பு பூஜை மீண்டும் இன்று முதல் தொடங்கியது. இதனை முன்னிட்டு கந்த சஷ்டி யாகசாலை மண்டபத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் கலந்து கொண்டு தாராபிஷேகத்தை தொடங்கி வைத்தார். 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாரா பிஷேகம் நடைபெறுவது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story