தமிழகம்,புதுவையில் வெப்பநிலை உயர வாய்ப்பு.

தமிழகம்,புதுவையில்  வெப்பநிலை உயர வாய்ப்பு.

பைல் படம் 

வரும் 13ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் அளவிற்கு படிப்படியாக உயரக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட சற்று குறைவாகவும் / இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 36.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32° – 36° செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33° – 35° செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 30° – 34° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21° – 25° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 34.8° செல்சியஸ் (-3.2° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.0° செல்சியஸ் (-3.5° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 13 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வரும் 12 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Tags

Next Story