வட மாவட்டங்களில் வரும் மூன்று நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
பைல் படம்
சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தி, ஈரோடு தர்மபுரி, திருப்பத்தூர், திருத்தணி உள்ளிட்ட வட உள் தமிழக மாவட்டங்களில் மத்திய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 42 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக கரூரில் 44.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இயல்பை விட 7.5 டிகிரி செல்சியஸ் அதிகம். வெப்ப அலையை பொருத்தவரையில் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவியது. முன்னறிவிப்பை பொருத்தவரை அடுத்து ஒரு மூன்று தினங்களுக்கு தமிழகத்தின் உள்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியசும், வட தமிழக மாவட்டங்களில் விட மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
வெப்ப அலையை பொருத்தவரையில் மே 6ஆம் தேதி வரை தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும். கோடை மழையைப் பொறுத்த வரையில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரே ஒரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மே 7ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி வரை உயரக்கூடும்.