தைப்பூசத் திருவிழா - குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

தைப்பூசத் திருவிழா - குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

பாதயாத்திரை பக்தர்கள் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதயாத்திரை குவிந்து வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைபூச திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று (ஜன. 25) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி, காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று கோயில் திருக்காப்பிடப்படும்.

பிற்பகலில் உச்சிகால அபிஷேகம் முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான், வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயிலை சென்றடைகிறார். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மார்க்க சாலைகளில் பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் அணி அணியாக வந்ததை காண முடிந்தது. இதனால் கோயில் வளாகத்தில் முருக பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுமார் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Tags

Next Story