வடகிழக்கு பருவமழை ஏமாற்றத்தால் காஞ்சிபுரத்தில் வறண்ட தாமல் ஏரி
வடகிழக்கு பருவமழை ஏமாற்றத்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தாமல் ஏரி வறண்டு கிடக்கிறது.
ஏரிகள் நிறைந்த மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது 45 ஏரிகள் முழு கொள்ளளவையும் 29 ஏரிகள் 75 சதவீதம் கொள்ளளவையும் எட்டி உள்ளன. காஞ்சிபுரம் கோட்டத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட பாலாறு உபக்கோட்டத்தில் மொத்தம் உள்ள 1022 ஏரிகளில், 159 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி மற்றும் தென்னேரி ஆகிய இரு ஏரிகளில் 90 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மற்றொரு ஏரியான தாமல் ஏரி; 2300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரியில் 20 சதவீத நீர் இருப்பு பெற்றுள்ளது. வடகிழக்கு பருவ மழை ஏமாற்றத்தால் இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரம்புவது சிக்கலை ஏற்படுத்தி உள்ளதால் விவசாயிகளுக்கு ஏமாற்றம் மிஞ்சியது. கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் 533 மி.மீ., மழை பெய்த நிலையில் தற்போது அதில் பாதி அளவான 243 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழையும் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. நேற்று மாலை முதலே மழை பொழிவில்லாமல் வறண்ட வானிலை காணப்படுகிறது. அக்டோபர் மாத இறுதியில் ஆரம்பிக்க வேண்டிய பருவமழை தற்போது வரை தொடர்ச்சியாக மழை இல்லாதது கோடை காலத்தில் பெரிதும் பாதிக்கும்.