தஞ்சாவூரில் டிச.30க்குள் மதுக்கடையை மூட அதிகாரிகள் உறுதி 

தஞ்சாவூரில் டிச.30க்குள் மதுக்கடையை மூட அதிகாரிகள் உறுதி  அளித்துள்ளானர்.

தஞ்சாவூர் மாநகரத்தின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் வந்து, பொதுமக்கள் வணிகம் செய்யும் பிரதான வழியாக மாட்டு மேஸ்திரி சந்து உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வணிகர்களும், குடியிருப்பு வாசிகளும் இந்த இடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இடிந்து விடும் நிலையில் பழைய கட்டிடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, பலகட்ட போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து நடத்தியுள்ளது. அப்போது, தஞ்சாவூர் வட்டாட்சியராக இருந்த சக்திவேல் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 2023 அக்டோபர் 10ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த உறுதிமொழி அளிக்கப்பட்டது. அந்த உறுதி மொழியை அரசும், அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்தவில்லை.

அந்த இடத்தில் இதுவரை டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கி வருகிறது. எனவே, டாஸ்மாக் கடையை அகற்றும் வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் டிச.11 திங்கள்கிழமை நடத்தப்படும். இதுதொடர்பாக, டிச.8 வெள்ளிக்கிழமை மாலை தெருமுனைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வ பாண்டியன், மேற்கு காவல் ஆய்வாளர் சந்திரா ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததின் பேரில், டிச.8 வெள்ளிக்கிழமை காலை டாஸ்மாக் நிர்வாகக் கட்டிடத்தில், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் வருகின்ற டிச.30ஆம் தேதி அன்று கடையை மூடுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததன் பேரில், அன்று கடையை மூடவில்லை என்றால், அடுத்த கட்டமாக இன்னும் மக்களை திரட்டி வலிமையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை நடத்தும் என்று கூறி, பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்றுக் கொண்டு காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டதுள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். குருசாமி, இ.வசந்தி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன், வி.கரிகாலன், பி.சத்தியநாதன் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story