தஞ்சாவூர் பொறியாளர் கண்டுபிடித்த ட்ரோன் - அரசு அனுமதிக்காக காத்திருப்பு

தஞ்சாவூர் பொறியாளர் கண்டுபிடித்த ட்ரோன் - அரசு அனுமதிக்காக காத்திருப்பு

ட்ரோனுடன் தினேஷ் பால்ராஜ்

அவசர சிகிச்சைக்காக மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தஞ்சாவூர் பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்ட ட்ரோன் அரசு அனுமதிக்காக காத்திருக்கிறது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை கூட்டுறவு ஸ்ரீநகர் கோ-ஆபரேட்டிவ் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் பால்ராஜ்(33). இவர் தஞ்சாவூரில் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். இதையடுத்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மன், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று ஆளில்லா ட்ரோன்களை அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வடிவமைத்துக் கொடுத்து, அதில் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து சொந்த ஊரில் அவசர சிகிச்சைக்காக மருந்து பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ட்ரோன்களை வடிமைத்து வழங்க வேண்டும் என நீண்ட நாள் கனவை நிறைவேற்ற, கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு வேலைவாய்ப்பை புறந்தள்ளிவிட்டு தஞ்சாவூர் வந்தார். தஞ்சாவூரிலேயே கடந்த இரு ஆண்டுகளாக அவசர சிகிச்சைக்காக மருந்து பொருட்களையும், ரத்தம் மற்றும் உடல் உறுப்புகளையும் கொண்டு செல்லும் வகையில் ட்ரோன் வடிவமைத்தார்.

முழுவதும் சொந்த நாட்டு தயாரிப்பில் 3 டி பிரிண்டிங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன்களை அண்மையில் நேரில் ஸூகோ நிறுவனத்தின் தலைவரும், பத்மஸ்ரீ விருதாளருமான ஸ்ரீதர் வேம்பு பார்வையிட்டு, தினேஷின் ட்ரோன் வடிவமைப்பை பாராட்டியதோடு இல்லாமல், தனது நிறுவனத்தின் சார்பில் ட்ரோன்களை மேலும் வடிவமைக்க அதற்கான முதலீடுகளை வழங்க முன் வந்துள்ளார். தினேஷ் பால்ராஜால் உருவாக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் மூலம் மலைவாழ் பகுதிகளில் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான மருந்து பொருட்களையும், இதர அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்து பொருட்களையும், உடல் உறுப்புகளையும் விரைவாக கொண்டு செல்ல முடியும். அதற்கான தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்.

இதுகுறித்து தினேஷ் பால்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரோன் தொடர்பான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறேன். உலகின் பல நாடுகளில் சென்று பணியாற்றி வந்துள்ளேன். ஜெர்மன், நெதர்லாந்து நாடுகளில் மருந்து பொருட்களை விரைவாக கொண்டு செல்ல ட்ரோன்களை பயன்படுத்தப்படுகிறது. இதே போல் நம் நாட்டிலும் மருந்து பொருட்களை மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்காத மலைவாழ் கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விரைவாக கொண்டு செல்லும் வகையிலும், ட்ரோன் உருவாக்கப்பட்டது. இந்த ட்ரோனில் மருந்து பொருட்களை விரைந்து கொண்டு செல்வதன் மூலம், மகப்பேறு மரணங்கள், பாம்பு தீண்டுவதால் ஏற்படும் மரணங்கள் உள்ளிட்ட பல உயிரிழப்புகள் தடுக்க முடியும்.

இந்த ட்ரோன் மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் 400 மீட்டர் உயரத்தில் செல்லும், 7 கிலோ வரை எடை உள்ள மருந்து பொருட்களை எளிதில் எடுத்துச் செல்லும். இதன் மொத்த எடை 25 கிலோவாகும். தொடர்ச்சியாக 1 மணி நேரம் பறந்து செல்லக்கூடிய வகையில் பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரோன் பறக்க தேவையான செயற்கை கோள் மொபைல் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு, அதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளேன். வான் வெளியில் பறக்க அதற்கான தடையின்மை சான்றை பெற்றுள்ளேன். தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, எனது ட்ரோன் கண்டுபிடிப்பை காட்சிப் படுத்தினேன்.

அப்போதே அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல இந்த ட்ரோனுக்கு அனுமதி வழங்க கேட்டுக் கொண்டேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கும் பட்சத்தில், பல ட்ரோன்களை உருவாக்கி அதனை செயல்படுத்த முடியும். இதற்காக நான் யாழி ஏரோ ஸ்பேஸ் என்ற நிறுவனத்தை சொந்த ஊரான தஞ்சாவூரிலேயே தொடங்கியுள்ளேன். எனது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு என்னுடைய மனைவி அனுகிரஹா கணேசனும் உடனிருந்து வருகிறார். எனது ட்ரோனுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் பலருக்கும் வேலைவாய்ப்பை தஞ்சாவூரிலேயே இருந்தவாறு உருவாக்கி தர முடியும்" என்றார்.

Tags

Next Story