ரூ.2.கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கியதற்கு நன்றி - ஆட்சியர்
”காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது” (குறள் 102) என்னும் வள்ளுவரின் கூற்றுப்படி, ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் ’மிக்ஜாம்’ புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்த நல்லுள்ளங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த வாரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்! அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.” என வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை மொத்தம் 31 கனரக வாகனங்களில் 1 கோடியே 88 இலட்சத்து 62 ஆயிரத்து 837 ரூபாய் மதிப்பீட்டில் அதிகபட்சமான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பெரும் முயற்சிக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய வனத்துறை அமைச்சர், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பங்களிப்பு செய்த பல்வேறு அமைப்புகளுக்கும், உறுதுணையாக இருந்த அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் மருத்துவா் ச.உமா நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.