பனை மரங்களுக்கு நன்றி தெரிவித்து வழிபாடு

தஞ்சாவூர் அருகே, பனையேறிகளுக்கு வாழ்வாதாரம் வழங்கிய பனை மரங்களுக்கு நன்றி தெரிவித்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.

தஞ்சாவூர் அருகே பனையேறிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக பனை பொருட்கள் மூலம் வாழ்வாதாரம் வழங்கிய பனை மரங்களுக்கு நன்றி தெரிவித்து படையலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டியில் 50 க்கும் மேற்பட்ட பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த பனை மரங்கள் மூலம் ஆண்டு தோறும் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் நுங்கு, பதனீர் உள்ளிட்ட பனைப் பொருட்கள் மூலம் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய பனை மரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை பனைமரங்களுக்கு, பனைப் பொருட்களை வைத்து படையலிட்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தென்னிந்திய சாணார் சங்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான எஸ்.குணசேகரன் கூறியதாவது: நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறோம். பனை மரத்தின் மூலம் கிடைக்கும், நுங்கு, பதனீர், கருப்பட்டி, பனங்கிழங்கு, பனைஓலை ஆகியவற்றை கொண்டு வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் தொடங்கி வைகாசி மாதம் வரை வெயில் காலத்தில் எங்களுக்கு நுங்கு, பதனீர் உள்ளிட்ட பனைப் பொருட்களை வழங்கி வரும் பனை மரங்களுக்கு வைகாசி மாதத்தில் அதற்கு நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தி வருவது வழக்கம்.

அதன்படி பதநீர் மூலம் பொங்கல் வைத்து படையலிட்டு, பனை மரங்களுக்கு மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து அதனை வழிபட்டு நன்றி தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த விழாவின் போது உறவினர்கள், நண்பர்களை வரவழைத்து அவர்களுக்கு விருந்து அளிப்பதும் வழக்கம். இதன் மூலம் அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த பனை மரங்கள் மூலம் நல்ல பனைப் பொருட்களை பெற்று, வருவாய் கிடைக்கும் என்பது எங்களது நம்பிக்கை. கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.. பனை மரங்களை பாதுக்காக வேண்டும் என தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பனை மரத்தின் மூலம் நுங்கு, பதநீர் போன்ற பொருட்களை பெற்று நாங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தினாலும், எங்களுக்கு கள் மூலம் தான் வருவாய் கிடைக்கும்.

இந்த கள் என்பது இயற்கையானது தான். இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு பனை மரத்திலிருந்து கள் இறக்க அரசு அனுமதி வழங்கினால் எங்களது வாழ்வாதாரம் சிறக்கும். அதே நேரத்தில் தமிழக அரசு பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கு உரிய பலனும் கிடைக்கும்" என்றார்.

Tags

Next Story