அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது

கள்ளர், மறவர், அகமுடையோர் இணைந்த முக்குலத்தோர் சமூதாயத்தை தேவர் சமூகம் என்ற பெயரில் அழைப்பது தொடர்பாக கடந்த 1995-ம் ஆண்டு செப்.11-ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணையை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர், கடந்த 2011-ம் ஆண்டு இது தொடர்பாக மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 'தேவர் சமுதாயம் என அழைக்கப்படாத நிலையில் கள்ளர், அகமுடையோர் மற்றும் சேர்வை பிரிவினர் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும், பிரமலைக் கள்ளர் மற்றும் மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப் பட்ட பிரிவிலும் உள்ளனர்.ஒரே சமுதாயத்தில் பல பிரிவுகளாக உள்ளனர். எனவே தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் நேற்று (ஜன.24) வழங்கினர். அதில், தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனிபட்ட நபரின் விருப்பங்களுக்காக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கமுடியாது. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கத்தக்கல்ல என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
