சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்

அன்புமணி இராமதாஸ் 

தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு இப்போது தான் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றை காப்பீடு செய்வதற்கான கானக்கெடு நாளை நவம்பர் 15-ஆம் நாளுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஏறக்குறைய 70% உழவர்கள் மட்டுமே காப்பீடு செய்திருக்கும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நாளையுடன் முடித்துக் கொள்வது நியாயமாகாது. அதனால், சம்பா மற்றும் தாளடி நெல் நடவு செய்துள்ள மீதமுள்ள 30% உழவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

சம்பா பயிர்க் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து விட்ட நிலையில், சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பி சம்பா மற்றும் தாளடி பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா? என்பதும் தெரியவில்லை. இத்தகைய சூழலில் அனைத்து சாதக, பாதகங்களையும் அலசி ஆராய்ந்து உழவர்கள் ஒரு முடிவுக்கு வந்து சம்பா நடவைத் தொடங்க தாமதம் ஆகி விட்டது. இதில் உழவர்களின் தவறு எதுவும் இல்லை.

இன்னொருபுறம் சம்பா மற்றும் தாளடி பயிர்க்காப்பீட்டுக்கு தேவையான சான்றுகளை தாக்கல் செய்வதில் புதிய நடைமுறைகள், சான்றுகள் வழங்குவதில் ஏற்படும் தாமதம், தீபஒளி தொடர் விடுமுறை ஆகியவற்றின் காரணமாகவும் சம்பா பயிர்க்காப்பீடு தாமதமாகிறது. சம்பா மற்றும் தாளடி நடவுப் பணிகளே இன்னும் பெரும்பான்மையான பகுதிகளில் நிறைவடையாத நிலையில், அதற்கு முன்பாகவே காப்பீட்டுக்கான காலக்கெடுவை முடித்துக் கொள்வது நியாயமல்ல.

போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், குறுவை சாகுபடியை காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களால் வெற்றிகரமாக செய்ய முடியவில்லை. அதேநிலை சம்பா சாகுபடிக்கும் ஏற்பட்டால், காப்பீடு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் பெரும்பான்மையான உழவர்கள் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் இறங்கியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், கடந்த ஆண்டைப் போலவே, நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்.

Tags

Next Story