ஊடகத்துறையினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய தேர்தல் அலுவலர்!

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தலில் ஊடகத்துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை ஆட்சியர் வழங்கினார்.

மக்களவை பொது தேர்தல் 2024 முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் ஊடகத்துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு (Media Certification and Monitoring Committee) உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்ட சான்று எண்ணுடன் கூடிய தேர்தல் விளம்பரங்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும்.

ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியில்லாத தேர்தல் விளம்பரங்களை எக்காரணம் கொண்டும் நாளிதழ்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிடவோ / ஒளிபரப்பவோ கூடாது. சட்டத்திற்கு ஒத்திசைவாக இல்லாததும் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை பாதிப்பதும் உணர்ச்சியை தூண்டக்கூடியதும் அல்லது அதிர்ச்சி தரக்கூடிய வெறுப்பு மற்றும் புரட்சியை தூண்டுகிற விளம்பரங்களை நாளிதழ்களோ, தொலைக்காட்சிகளோ வெளியிடவோ,ஒளிபரப்பவோ கூடாது. ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு பணம் கொடுத்து (Paid News) வெளியிடப்படும் செய்திகளாக இனம் காணும் அனைத்து செய்திகளும் சம்மந்தப்பட்ட வேட்பாளரின் செலவினக் கணக்கில் சேர்ப்பதற்காக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்கப்படும். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் தகவல்கள் மற்றும் பிரச்சாரங்கள் வேட்பாளர்களின் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும். நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியினர் நேரடியாக தேர்தல் குறித்த விளம்பரங்கள் மற்றும் செய்திகளை வெளியிட அனுமதிகோரி விண்ணப்பிக்கக்கூடாது. ஊடகங்கள், குறிப்பிட்ட வேட்பாளர் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரிடமும் ஆதரவு பெற்றுள்ளார் என்றும், அவர்தான் தொகுதியில் வெற்றி பெறுவார் என்றும் வரும் செய்திகள், ஒரே வேட்பாளரை குறித்து அவரது வெற்றி வாய்ப்பை பெரிதாக கூறி மீண்டும் மீண்டும் பேசுவது போன்ற செய்திகள் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளாக (Paid News)கருதப்படும்.

ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்று நாட்களுக்கு முன்பாகவும், பிற அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஏழு நாட்களுக்கு மூன்பாகவும் விண்ணப்பிக்க வேண்டும். விளம்பரங்கள் தனிப்பட்ட பிற நபரையோ, கட்சியினையோ குறித்து விமர்சனங்கள் செய்யக்கூடாது. பிற வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையினை விமர்சிக்கக்கூடாது. விளம்பரங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ (சாதி, மத. இன) இருக்கக்கூடாது. விளம்பரம் தயாரிப்பதற்கு செலவிடப்பட்ட கட்டணத்துடன் அதன் அளவு, எண்ணிக்கை உட்பட இதர வகை செலவினப் பட்டியுடன் விண்ணப்பிக்க வேண்டும். விளம்பரத்திற்கான கட்டணம் அரசு நிர்ணயத்துள்ள கட்டணங்களின் படி கணக்கீடு செய்யப்படும். விளம்பரங்கள் அச்சிடப்படும் அல்லது வடிவமைக்கப்படும் அச்சகத்தின் பெயருடன் அச்சிடப்பட வேண்டும். விளம்பரத்தில் ஏதேனும் மாற்றம் செய்யக் கோரினால் உடனடியாக மாற்றம் செய்து வழங்கிட வேண்டும். அனுமதி பெற்ற அனுமதிக்கப்பட்ட விளம்பரத்தினை மட்டுமே அச்சிடவோ ஒளிபரப்பவோ வேண்டும். அனுமதி பெற்ற எண்ணை விளம்பரத்தில் கண்டிப்பாக எளிதாக தெரியும் வண்ணம் இடம்பெற செய்ய வேண்டும்.

அனுமதிகோரும் விண்ணப்பத்துடன் விளம்பர வடிவமைப்பு வீடியோ ஆகியவற்றை இணைக்க வேண்டும். விளம்பரங்களில் இடம்பெற வேண்டிய வாசகங்கள். காட்சிகள் மற்றும் பாடல்வரிகளை அச்சுவடிவில் விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் காண்காணிப்பு குழு உறுப்பினர்/ செயலர் ராஜபிரகாஷ், குழு உறுப்பினர்கள் மோகன்,செந்தில்குமார் மற்றும் ஊடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story