வெள்ளத்தில் சிக்கி 2 நாளாக தவித்த அமைச்சர் மீட்பு

வெள்ளத்தில் சிக்கி 2 நாளாக தவித்த அமைச்சர் மீட்பு

ஏரல் அருகே வெள்ளத்தில் சிக்கி 2 நாளாக தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

ஏரல் அருகே வெள்ளத்தில் சிக்கி 2 நாளாக தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த பெருமழையால் ஏரல் பகுதியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கடந்த 18-ந்தேதி மாலை ஏரல் பகுதிக்கு சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அங்கிருந்து காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். ஏரல் அருகே உள்ள உமரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் அமைச்சரால் அங்கிருந்து வர முடியவில்லை.

இதையடுத்து அவருடன் இருந்த கட்சி நிர்வாகிகள், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை பத்திரமாக உமரிக்காடு கிராமத்தில் உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அந்த பகுதியையும் மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கிருந்து அமைச்சரால் கடந்த 2 நாட்களாக வெளியே வரமுடியவில்லை. மேலும் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டதால் தகவல் தெரிவிக்கவும் இயலவில்லை. இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உமரிக்காடு கிராமத்தில் சிக்கியிருப்பது குறித்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று அதிகாலை 5 மணியளவில் உமரிக்காட்டுக்கு சென்று அமைச்சரை பத்திரமாக மீட்டு, தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலைக்கு அழைத்து வந்தனர்.

அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள இல்லத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரமாக வந்து சேர்ந்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களுடன் இணைந்து பல்வேறு பகுதிகளில் மழைவெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். மழை வெள்ளத்தில் அமைச்சரே 2 நாளாக சிக்கி தவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story