மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டுகிறது!!

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டுகிறது!!

மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.

கர்நாடக, தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்று தண்ணீர் வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால் அங்கு பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.41 அடியாக இருந்தது. எனவே இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 701 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.53 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story