மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலையுடன் நிறுத்தம்!!
மேட்டூா் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணை மூலம் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறிப்பிட்ட நாளில் அல்லது பின்னர் திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஒரு மாதம் தாமதமாக ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிக அளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படுகிறது. இது தொடர்பான உத்தரவு வந்ததும் அதிகாரிகள் தண்ணீர் நிறுத்தம் செய்வார்கள்.