பரமத்தி வேலூர் பகுதியில் நிலத்தடி நீர் குறையும் அபாயம்

பரமத்தி வேலூர் பகுதியில் நிலத்தடி நீர் குறையும் அபாயம்

பரமத்திவேலூர் அருகே, ராட்சத பள்ளம் தோண்டி தண்ணீர் எடுப்பதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயமும், வாழ்வாதாரமும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து, பரமத்தி வேலூர் அடுத்துள்ள, ஜமீன் இளம்பள்ளி கிராம மக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் அளித்துள்ள கோரிக்கை மனுவில், நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஜமீன் இளம்பள்ளி பஞ்சாயத்து, ஜமீன் இளம்பள்ளி கிராமத்தில், 200 அடி அகலம், 200 அடி நீளம் மற்றும், 70 அடி ஆழத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில், வெளியே கிணறு என்ற பெயரில், ராட்சத இயந்திரங்களை கொண்டு, குவாரி போல் ராட்சத பள்ளம் வெட்டி வருகின்றனர்.

இந்த ராட்சத பள்ளத்தில் இருந்து, முறைகேடாக, அரசு மின்சாரத்தை திருடி, அதிநவீன ராட்சத மின்மோட்டார்களைக் கொண்டு, தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றி வருகின்றனர். அதன் காரணமாக, ஜமீன் இளம்பள்ளி கிராமத்தில், குடிநீருக்காக இருந்த ஆழ்துளை குழாய் கிணறுகளின் நீர்மட்டம், மழைகாலத்திலேயே குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு மாதத்தில், குடிநீர் பஞ்சம் ஏற்படும் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. மேலும், சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயக் கிணறுகளில் நீர் மட்டம் அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளது. அதனால், எங்கள் வாழ்வாதாரமான விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலையில், போராட்டத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். குடிப்பதற்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விரைவில் நீரே இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதிநவீன வெடி பொருட்களைக் கொண்டு பள்ளம் தோண்டி வெடி வெடிப்பதால், வீடுகள் அதிர்வடைகிறது. எங்கள் வாழ்வாதாரமும், விவசாயமும் பாதிக்கப்படாமல் இருக்க, ராட்சத பள்ளம் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story